எஸ்சி/எஸ்டி வகுப்பினரில் முன்னேறியவர்களுக்கான இட ஒதுக்கீடு (கிரீமிலேயர்) தொடர்பான வழக்கை 7 பேர் அடங்கிய பெஞ்ச் முடிவு செய்ய வேண்டும் என்று அட்டார்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதை உச்ச நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டுள்ளது.
இந்த விஷயம் மிகவும் உணர்வுபூர்வகரமானது என்பதால் 7 பேர் அடங்கிய பெஞ்சுக்கு மாற்ற வேண்டும் என்று மத்திய அரசு நேற்று உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்தது. மத்திய அரசின் அட்டார்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால் வைத்த இந்த கோரிக்கையை உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே மற்றும் நீதிபதிகள் பி.ஆர். காவை, சூர்ய காந்த் ஏற்றுக் கொண்டனர். அடுத்த ஆண்டு (2020) இதுகுறித்து விசாரிப்பதாக ஏற்றுக் கொண்டனர்.
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இட ஒதுக்கீடு பெறுவதற்கு வருமான வரம்பு உச்சமாக வைக்கப்பட்டுள்ளது. ஆனால், எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு இது பொருந்தாது. இதுதொடர்பாக இருவேறு தீர்ப்புகள் முன்பு வழங்கப்பட்டு இருந்தது.